செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

இலங்கைக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொதிப்பு

ராமேசுவரம்: இந்தியக் கடல் எல்லையையொட்டி கச்சத்தீவு அருகே நேற்று அதிகாலை மீன்படித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் மிரட்டினர். இதனால் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் துறைமுகத்துக்குத் திரும்பினர். செய்தியாளர் களிடம் அவர்கள் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்கி, விரட்டியடிப்பது நடந்து வருகிறது. இதன் காரணமாக எங்களுக்கு ஒவ்வொரு படகிற்கும் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. இந்தப் போக்கு நீடித்தால் ராமேசுவரத்தில் மீன்பிடித் தொழில் பாதிக்கப் படும். இதற்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றனர்.

நெஞ்சு வலியிலிருந்து மீண்டார்

சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தல் வெற்றிக்குப் பிறகு நலத் திட்டப் பணிகளிலும் அரசியல் பணி களிலும் ஈடுபட்டு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு (படம்) புதன்கிழமை மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை போரூா் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவனுக்கு இதய சிகிச்சை மருத்துவா்களும் பொது மருத்துவா்களும் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியானது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவா் வீடு திரும்புவார்

என்றும் மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.

தூத்துக்குடி துறைமுகம் சாதனை

தூத்துக்குடி: மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சு, தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு இந்த நிதியாண்டில் 36 மில்லியன் டன் சரக்குகளைக் கையாள இலக்கு நிர்ணயித்திருந்தது. இருப்பினும் நிதியாண்டு முடிவதற்கு 17 நாள்களுக்கு முன்னதாகவே, இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது அந்தத் துறைமுகம். மார்ச் 14 ஆம் தேதி வரை 36.03 மில்லியன் டன் சரக்குகள் அங்கு கையாளப் பட்டுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.35% அதிகம். உள்நாட்டு சரக்குப் போக்குவரத்து அதிகரித்ததும் பெரிய சரக்குக் கப்பல்களின் வருகையும் இந்த சாதனைக்கு உறுதுணை புரிந்ததாக வஉசி துறைமுக ஆணையத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.