சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சென்னையில் பத்து கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவிலின் மகா குடமுழுக்கு விழா நேற்று சிறப்பாக நடந்தேறியது.
சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் ஆறு கிரவுண்ட் நிலத்தில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது இந்தக் கோவில்.
இதற்கான இடத்தை பழம்பெரும் திரைப்பட நடிகை காஞ்சனா கோவில் நிர்வாகத்துக்கு வழங்கி இருந்தார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில்தான் பத்மாவதி தாயாருக்கு தனிக் கோவில் கட்டப்பட்டுள்ளது.
வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ள இந்தக் கோவிலில் மண்டபம், மடப்பள்ளி, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் உள்ளன.
கோவிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டது என்றும் கலைநயம் மிக்க சிற்பங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை நான்கு மணிக்குத் தொடங்கிய பூசைகளை அடுத்து, மகா குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்களுக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வாகன நிறுத்துமிடங்களும் தயார் செய்யப்பட்டு இருந்தன.

