தமிழக காவல்துறை பெண்கள் பிரிவின் பொன்விழா நிகழ்வில் முதல்வர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 'அவள்' என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது அரசு.
தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பிரிவு தொடங்கப்பட்டதன் பொன் விழா நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பெண்கள், சிறார்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான 'அவள்' திட்டம் ரூ.8.5 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். பெண்களுக் காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக முதல்வர் குறிப்பிட்டார்.
இருபது பேருடன் தொடங்கப்பட்ட பெண் காவலர் பிரிவில் தற்போது 35 ஆயிரம் பெண் காவலர்கள் பணியாற்றி வருவதாக அவர் கூறினார். பெண் காவலர்கள் நாட்டைக் காத்துக்கொண்டு இருக்கும் காவல் அரண்கள் என்று குறிப்பிட்ட அவர், கோடிக்கணக்கான மக்களின் உயிரும் உடைமையும் பெண் காவலர்களை நம்பி ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.
முதல்வர் என்ற வகையில் தமக்கான பாதுகாப்புப் படையிலும் பெண் காவலர்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"தமிழகக் காவல் துறையைப் பொறுத்தவரையில், இணைய தொழில்நுட்பத்தை 70 விழுக்காடு பெண்கள்தான் செயல்படுத்துகிறார்கள்.
"காவல் தொழில்நுட்பப் பிரிவில் 140 பெண் உதவி ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். விரல் ரேகைப் பிரிவில் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் விதமாக 72 பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்," என்று பெருமிதம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பெண் காவலர்களுக்கான அன்றாட காவல் வருகை அணிவகுப்பு இனி காலை ஏழு மணி என்பதற்குப் பதிலாக, எட்டு மணி என்று மாற்றியமைக்கப்படும் என்றும் பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கான தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
அனைத்துக் காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும் என்று குறிப்பிட்ட அவர், மிக விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும் பெண் காவலர்களின் வசதிக்காக 'காவல் குழந்தைகள் காப்பகம்' அமைக்கப்படும் என்றார்.
"பெண் காவலர்களைச் சிறப்பிக்கும் வகையில் 'கலைஞர் காவல் பணி விருதும் கோப்பையும்' ஆண்டுதோறும் வழங்கப்படும்.
"பெண் காவலர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.