நாமக்கல்: பரமத்திவேலூர் பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
எட்டு குடிசைகள் முற்றிலுமாக தீக்கிரையான நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள ஆலைகளில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இரண்டு ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் எட்டு குடிசைகளில் தங்கி இருந்தனர். அவர்கள் ஆலைக்குச் சென்றிருந்த வேளையில் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.
விவரம் அறிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கும் மாவட்ட கண்காணிப்பாளர் கலைச்செல்வனும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று இருவரும் உத்தரவாதம் அளித்தனர். பதற்றத்தைக் குறைக்க ஏதுவாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

