பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தத் தடை விதிக்கக் கோரிய மனு விசாரணை
சென்னை: இரட்டைத் தலைமை கொள்கையை நீக்கிவிட்டு ஒற்றைத் தலைமையை உருவாக்கிக் கொண்டுவரப்பட்ட, தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட பொறுப்புத் தலைமை நீதிபதி டி ராஜா, இதை அவசர வழக்காக விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். அதன்படி, இந்த மனுவை விடுமுறை நாளான மார்ச் 19, ஞாயிற்றுக்கிழமை நீதிபதி கே.குமரேஷ் பாபு தொடங்கி வைத்தார்.
நேற்று நடந்த வழக்கு விசாரணையில், "உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே வழக்கை தொடர்ந்துள்ளோம். நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்று அறிவித்துவிட்டு இப்போது தேர்தலை அறிவித்துள்ளனர்.
"அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை," என்று ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் 40 நிமிட வாதம் நிறைவுபெற்றதை அடுத்து பழனிசாமி வாதம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார். "ஒன்றரை கோடி தொண்டர்களில் ஒரு விழுக்காடு ஆதரவு கூட ஓ.பன்னீர்செல்வத்துக்கு இல்லை. பொதுச்செயலாளர் தேர்தல் 1.5 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது என்று வாதாடினார்.
மேலும், ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "சனிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி ஞாயிறு வேட்பு மனு தாக்கல் நிறைவு என அறிவித்துவிட்டனர்.
"பத்தாண்டுகள் உறுப்பினர், ஐந்தாண்டுகள் தலைமைக் கழக நிர்வாகி என்ற விதியில் திருத்தம் செய்துள்ளனர்.
"அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் சாதாரண தொண்டன் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர். தேர்தலை நடத்த அனுமதித்தால் தேர்தல் முடிவாகும் அன்று மாலையே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலராக அறிவித்துவிடுவார்கள். எனவே, இந்தத் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும்," என்று வாதிட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து நீதிபதி குமரேஷ் பாபு, "பொதுக்குழு வழக்கு நிலுவையில் உள்ளபோது பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன," என்று பழனிசாமி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம். ஆனால், தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.
ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்ட்ட தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை மார்ச் 22ஆம் தேதியே விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

