சென்னை: தமிழை பெயர்ப்பலகையில் வளர்க்க முடியாதா என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், தமிழ் நாடு வணிகர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
"எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று தான் முழங்கினோம். ஆனால், எங்குமே தமிழ் இல்லை என்பது தான் கசக்கும் உண்மை. எங்கும் தமிழ் இல்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பவை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தான்.
"சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும்தான் என்றில்லை. தமிழ்நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. அக்காட்சியைக் காண மனம் பொறுக்கவில்லை," என்று டாக்டர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
"தமிழைத்தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பரப்புரைப் பயணத்தை சென்னையிலிருந்து மதுரைக்கு மேற்கொண்டேன். ஆனால், அந்த பயணத்திலும் கடைகளின் பெயர்ப்பலகைகள் உள்பட எங்கும் தமிழைக் காண முடியவில்லை.
"இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக கடைகளின் பெயர்ப்பலகைகளை தனித்தமிழில் அமைக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு வரையறுத்துள்ளவாறு எழுத வேண்டும் என்று கோரி எனது சார்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் கோ.க. மணி அண்மையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு.விக்கிரமராசா, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெயர்ப்பலகைகள் தொடர்பாக 1948ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையின் முக்கியக்கூறுகள் வருமாறு:
1. எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும்.
2. பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும் போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும்.
3. பெயர்ப் பலகையிலுள்ள எழுத்துகள் சீர்திருத்த வரிவடிவில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

