தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல்; பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட் டது. அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசின் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அப்போது, வருவாய் பற்றாக்குறையை அரசு கணிசமாகக் குறைத்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை, ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அரசு நிர்ணயித்திருந்த இலக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், கல்வித்துறைக்கு ரூ.47,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையைப் போல், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த நிதிநிலை அறிக்கையில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
உரிமைத்தொகை அறிவிப்பு
எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது.
இதை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
சோழர் அருங்காட்சியகம்
சோழப் பேரரசின் புகழை உலகறியச் செய்யும் விதமாக தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ் உலக மொழியாகத் திகழ பண்பாட்டு மாநாடு
தமிழ் மொழி உலக மொழியாகத் திகழ பண்பாட்டு மாநாடு நடத்தப்படும் என்றும் தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியை வளர்க்க இந்த மாநாடு துணை நிற்கும் என்றும் நிதியமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.
தமிழர் பண்பாட்டுத் தலங்களை இணைக்க பயணங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் 591 தமிழ் அறிஞர்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டுப்புற கலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் உறுதி அளித்தார்.
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.17,500 கோடி
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட இருக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக அரசு ரூ.17,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மதுரையின் மையப்பகுதியில் நிலத்துக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று குறிப்பிட்ட நிதியமைச்சர், இதற்காக ரூ.8,500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.
மதுரை நகரம் தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.
கோவையில் ரூ.9,000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கோவை, மதுரை நகரங்களை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பத்திரப் பதிவுக் கட்டணம் குறைப்பு
தமிழகத்தில் நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க ஏதுவாக பதிவுக் கட்டணத்தை நான்கு விழுக்காட்டில் இருந்து 2% ஆக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை குறித்த புதிய அறிவிப்புகளையும் நிதியமைச்சர் வெளியிட்டார். இதன் மூலம் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்கள் பெரிதும் பயனடைவர் என்று அவர் குறிப்பிட்டார்.
விவசாயக் கடன் தள்ளுபடி, இலவச இணையச் சேவை
விவசாய கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி ஒதுக்கீடு செய்்வதாக தமிழக அரசு அறிவித்ததை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இதற்காக ரூ.2,393 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச இணையச் சேவைகள் வழங்கப்படும்.
400 கோவில்களில் குடமுழுக்கு
வரும் ஆண்டில் 400 கோவில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. பழனி, திருத்தணி, சமயபுரம் கோவில் பெருந்திட்டப் பணிகள் ரூ.485 கோடியில் மேற்கொள்ளப்படும்.
பள்ளிவாசல், தேவாலயங் களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
செம்மொழிப் பூங்கா
கோவையில் ரூ.172 கோடி மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழிப்பூங்கா இரு கட்டங்களாக அமைக்கப்படும்.
முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றார் நிதியமைச்சர்.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னை: எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளியல் இலக்கை நோக்கிச் செல்வதற்கு ஏற்ப இம்மாநாடு நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொழில்கள் செழிக்கும் தமிழ்நாட்டின் தனிச் சிறப்புகளையும் முதலீட்டை ஈர்ப்பதற்கு உகந்த சூழலையும் எடுத்துக்காட்டும் தளமாக இம்மாநாடு அமையும் என்றும் மாநாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார்.
"விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் ரூ.410 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தைவான் காலணி உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் 'தமிழக வழிகாட்டி' நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது," என்றார் அவர்.