செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

எல்லை பிரச்சினைகள் குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பெங்களூரு: தமிழகம், கர்நாடக எல்லைப் பகுதியில் நீடித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு மாநில அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது, இரு மாநில எல்லையில் உள்ள பாலாறு காட்டுப் பகுதியில், மீன் பிடிக்கும் தொழிலாளர் களுக்குத் தொல்லை தரக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அதிகாரிகள் முன்வைத்தனர்.

ஆபாச காணொளி: பாதிரியார் கைது

குமரி: வழிபாட்டுக்கு வந்த பெண்களை மயக்கி, மிரட்டி ஆபாச படங்கள், காணொளிகள் எடுத்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கன்னியாகுமரி காவல்துறையினர் கைது செய்தனர். 29 வயதான பெனடிக்ட் ஏராளமான பெண்களை தனது வலையில் விழவைத்து ஆபாச காணொளிகளை எடுத்தது அண்மைய விசாரணையில் அம்பலமானது. தாதியர் பயிற்சி பெறும் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை பெனடிக்ட் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. தலைமறைவாக இருந்த அவரை தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் காவல்துறை கைது செய்தது.

9 கிலோ தங்க நகை கொள்ளை: குற்றவாளியின் மனைவியும் கைது

சென்னை: ஒன்பது கிலோ நகைகள் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய குற்றவாளியின் மனைவி கைதானார். சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள நகைக்கடையில் கடந்த மாதம் 10ஆம் தேதி நள்ளிரவில் நுழைந்து ஒரு கும்பல் ஒன்பது கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளியான கங்காதரன், ஸ்டீபன், திவாகர், கஜேந்திரன் ஆகிய நால்வரை காவல்துறை கைது செய்தது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் வசித்து வந்த கங்காதரனின் மனைவி கீதா, உறவினர் ஒருவர் என்று இரண்டு பேர் கைதாகி உள்ளனர். இந்தக் கொள்ளை வழக்கில் இதுவரை ஐந்து கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நகைகள் மாயம்: ரஜினி மகள் புகார்

சென்னை: தனது வீட்டு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திடீரென மாயமாகி உள்ளதாக நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை என்றும் தனது வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.