கள்ளக்குறிச்சி: திருமணத்துக்கு முன்பு எதிர்பாராதவிதமாக மணமகனின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, மணமக்கள் அவரது உடல் முன்பு திருமணம் செய்து கொண்டனர். மனதை உருக்கும் இந்தச் சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்துள்ளது.
அங்குள்ள பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் பிரவீனுக்கு எதிர்வரும் 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் ராஜேந்திரன் நேற்று முன்தினம் காலமானார்.
இதனால் மணமக்களின் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கினர். ராஜேந்திரனுக்கு அஞ்சலி செலுத்த மணமகள் சொர்ணமால்யா சென்னையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி வந்தடைந்தார்.
அப்போது அவரிடம் பேசிய மணமகன் பிரவீன், தனது தந்தையின் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் தந்தை காலமாகிவிட்டாலும் அவரது உடல் முன்பு சொர்ணமால்யாவை கைப்பிடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மணமகளும் அவரது குடும்பத்தாரும் இதற்கு சம்மதிக்க, மணமக்கள் இருவரும் உடனடியாக திருமண கோலத்துக்கு மாறினர். பின்னர் உயிரிழந்த ராஜேந்திரன் முன்பு நின்று சொர்ணமால்யா கழுத்தில் கண்ணீர் மல்க தாலி கட்டினார் பிரவீன். அப்போது மணமகளும் துக்க நிகழ்வுக்காக கூடியிருந்தவர்களும் கண்ணீர் சிந்தினர்.

