சென்னை: தமிழகத்தில் உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தொற்றுப் பரவலால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றும் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதையடுத்து, நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருகிறது என்றார்.
"தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு அன்றாடத் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தது. இந்நிலையில், உருமாறிய ஓமிக்ரான் தொற்று தற்போது பரவி வருகிறது.
"எனினும் புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோர் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
"தமிழகத்தில் நேற்று முன்தினம் புதிதாக 76 பேருக்கு தொற்றுப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
அரசு மருத்துவமனைகளில் 2,000 மெட்ரிக் டன் அளவிற்கு உயிர்வாயு சேமித்து வைக்கும் திறன் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா இரண்டாம் அலையின் போது தயார் செய்த படுக்கை வசதிகள் இப்போது தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இளங்கோவனுக்கு தொற்று
ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்றுப்பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.
ஏற்கெனவே கடந்த 15ஆம் தேதி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

