சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல்
சென்னை: வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் தமிழக விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நேற்று அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
விவசாயிகளுக்கு வெளிநாடுகளில் பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா, மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் பரிசு, உணவு தானியப் பயிர்கள் உற்பத்தி, உற்பத்தித் திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல் விருதுகள் உள்ளிட்ட அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
23 லட்சம் இலவச மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இத்திட்டத்துக்காக ரூ.6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதற்காக மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
"அயல்நாடுகள் சிலவற்றில் உயர்ரக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தித் திறன் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. அங்கிருக்கும் தொழில்நுட்பங்களை நம் மாநில உழவர்களும் அறிவது. அவர்களுக்குள் ஊக்கத்தை உண்டாக்கும். பிறகு மனதில் தங்கி, தாக்கத்தை உண்டாக்கும்.
"நாமும் அப்படி உற்பத்தி செய்ய முடியாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்தும். அது சாகுபடியில் இருக்கும் தேக்கத்தை நீக்கி தேடலை உண்டாக்கும். அவர்கள் தங்கள் நிலங்களில் அத்தகைய முயற்சியை மேற்கொள்வார்கள்," என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்.
சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டில் 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 60,000 வேளாண் கருவிகள் தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் வேளாண்மை, தோட்டக்கலை தொடர்பான பட்டப்படிப்பு படித்த 200 இளையர்களுக்கு தொழில் தொடங்க ரூ.2 லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
பாடப் புத்தகங்களில் படமாகவும் ஊடகங்களில் காணொளியாகவும் கண்ட வயல்கள், தோப்புகள், பாசனக் கிணறுகளை மாணவர்கள் நேரடியாக காணவும் வேளாண்மையின் மகத்துவத்தை அறிந்து உணரவும் பண்ணைச் சுற்றுலா திட்டம் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

