செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்கும் என அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கெனவே அரசு உதவித் தொகை பெற்றுவரும் வயதான பெண்கள், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் இதில் மறுபடியும் பயனடையமாட்டார்கள் என்றும் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் பயன்பெற வாய்ப்பில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.

டாஸ்மாக் வருவாய் ரூ.50,000 கோடியாக உயரும் என எதிர்பார்ப்பு

சென்னை: டாஸ்மாக் மது விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக தமிழக நிதித்துறைச் செயலர் கூறியுள்ளார். மேலும் டாஸ்மாக் மூலம் நடப்பாண்டில் ரூ.45 ஆயிரம் கோடியும் கடந்த ஆண்டில் ரூ.36 ஆயிரம் கோடியும் கிடைத்துள்ளது என்றார் அவர்.

சுகாதாரத்துறை ஆய்வில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் அளித்துள்ள இறுதி விசாரணை அறிக்கை சுகாதாரத்துறையின் ஆய்வில் உள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையின்போது இத்தகவலை தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் போது சென்னை, கோவை இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.