துபாயில் வேலை பார்ப்பதாகக் கூறி தங்கநகைகள், ஏராளப் பணம் பறித்த பொறியாளர்
தூத்துக்குடி: 'நான் அவனில்லை' திரைப்பட பாணியில், தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு பெண்களை அடுத்தடுத்து திருமணம் செய்து, ஏமாற்றி தலைமறைவான 'கல்யாணராமன்' வினோத் ராஜ்குமாரை தனிப்படைக் காவலர்கள் சென்னையில் கைது செய்தனர்.
தனது சித்தப்பா, சித்தி, தங்கைகள் என குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் சேர்ந்து நான்கு பெண்களைத் திருமணம் செய்து, அவர்களை ஏமாற்றி 100 பவுன் தங்கநகைகள், லட்சக்கணக்கில் பணம் பறித்ததை விசாரணையில் வினோத் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள பேரூரணி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்தவர் பொறியாளரான வினோத் ராஜ்குமார். இவருக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2007ல் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ல் விவாகரத்து பெற்றனர்.
அதன்பிறகு 'மேட்ரிமோனி' இணையத் தளம் வழி, தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததைக் கூறாமல் இரண்டாவது திருமணத்துக்கு வினோத் பெண் தேடியுள்ளார்.
தான் துபாயில் வேலை பார்ப்ப தாகவும் திருமணம் முடிந்ததும் மனைவியைத் துபாய்க்கு அழைத்துச் சென்று விடுவதாகவும் கூறி மற்றொரு தூத்துக்குடி பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
திருமணத்துக்கு 80 சவரன் தங்க நகை, 4 லட்சம் ரொக்கப் பணம், துபாயில் வசிப்பதற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கான பணம் என அனைத்தையும் பெண் வீட்டார் தரப்பில் கொடுத்துள்ளனர்.
இதனிடையே, மூன்றாவதாக தூத்துக்குடியைச் சேர்ந்த விவா கரத்து பெற்ற பெண்ணை சமூக ஊடகம் வழி அறிமுகமாகி, திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில், வினோத் மற்ற பெண்களுடன் கைப்பேசியில் மணிக்கணக்கில் பேசுவதை மூன்றாவது மனைவி கண்டித் துள்ளார்.
இதையடுத்து, உன்னைப் போன்று ஏற்கெனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய் துள்ளேன். அத்துடன், பொதுப்பணித் துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணை நான்காவதாக திருமணம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வினோத்தின் கல்யாண லீலைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மூன்றாவது மனைவி தூத்துக்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரை அடுத்து தலைமறைவான வினோத்தை தேடி வந்த தனிப்படை காவல்துறையினர், சென்னையில் பதுங்கி இருந்தபோது அவரைக் கைது செய்தனர். அவரது திருமணத்துக்கு உடந்தையாக இருந்த 10 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. மூன்றாவது மனைவியிடம் இருந்து பல லட்சம் ரூபாய் பணம், நகைகளை அபகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

