சென்னை: வழக்கம்போல் நேற் றைய தேதியில் (மார்ச் 22) கடைப்பிடிக்கப்படும் உலக தண்ணீர் தினத்தை ஒட்டி, உலக உயிர்களின் நாடியாக விளங்கும் தண்ணீரை நாம் காக்கவேண்டும் என்றும் நம்மைக் காக்கும் தண்ணீரை வீணாக்கக்கூடாது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு தண்ணீரும் முக்கியமானது," என்று குறிப்பிட்டுள்ளார்.
"தண்ணீர் என்று சொல்லாமல் 'அமிழ்தம்' என்றவர் திருவள்ளுவர். இந்த தண்ணீர்தான் புவி வெப்பமயமாதலில் இருந்து காக்கிறது. நீரில்லையேல் உயிர்கள் இல்லை என்பதை உணர்ந்து செயல்படுவோம்," என்று கூறியுள்ளார்.
"திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகுத் தமிழில் சொல்கின்றன. நம் உடலில் அனைத்து செயல்பாடுகளும் முறையாக செயல்படத் தண்ணீர் மிகமிக அவசியம். ஒரு மனிதரால் பல நாள்களுக்கு உணவின்றி இருக்கமுடியும். ஆனால் நீரின்றி இருக்கமுடியாது. இத்தகைய உயிர்நாடியான தண்ணீரை நாம் காக்க வேண்டும். அதாவது நம்மைக் காக்கும் நீரை நாம் வீணாக்கக் கூடாது," என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

