சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பொதுச்செயலாளர் பதவியைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சியின் விதிகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் அந்த விதிகளைத் திருத்தி நிபந்தனைகளை நீக்கி பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட தயாராக உள்ளதாகவும் ஓபிஎஸ் தரப்பு வாதிட்டது.
இதை எதிர்த்து வாதிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று கூறியது.
தாங்கள்தான் உண்மையான கட்சி என்றால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் மெய்ப்பிக்க வேண்டும் என்றும் பழனிசாமி தரப்பு வாதிட்டது.
வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில்தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும் அது கூறியது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
ஓபிஎஸ் தரப்பு எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய இன்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டது.

