செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
37a825f1-3b6c-4cf9-b9b8-32715c10c0ef
-
Google News Preferred Icon

பாஜக நிர்வாகி வீட்டில் சோதனை

கோவில்பட்டி: கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. அதற்கான காரணம் தெரியவில்லை என்று ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டன.

ஓலைச்சுவடிகள் கணக்கெடுப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆவணங்கள் காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பழமையான ஓலைச்சுவடிகளை அறநிலையத்துறை ஆய்வுக்குழுவினர் கணக்கெடுத்தனர்.

இந்தச் சுவடிகளில் 25,500க்கும் மேற்பட்ட ஏடுகள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் சமயம், மொழி, ஆன்மிகம், மந்திரம், வரலாற்று சாட்சியங்கள், இலக்கியம் சார்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அறுநூறு ஆண்டுகள் பழமையான தமிழ், தெலுங்கு, கிரந்தம், தேவநாகரி, வட்டெழுத்துகளில் இந்த ஏடுகள் இருப்பதால் இவற்றை முழுமையாகப் படித்து விவரங்களைச் சேகரிக்க விரைவில் இதற்கென உள்ள மொழி அறிஞர்கள், ஆய்வாளர்கள் வரவுள்ளதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறு நகர்களில் 5ஜி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் கூடுதலாக 41 நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தி உள்ளது.

இதில், தமிழ்நாட்டில் காரைக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி, ஊட்டி, வாணியம்பாடி உள்ளிட்ட நகரங்களில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே 30 நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது.

பாம்புபிடி வீரருக்கு பத்மஸ்ரீ விருது

தமிழக பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால்-(படம்), மாசி சடையன் ஆகியோருக்கு அதிபர் திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தார். குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25ஆம் தேதி 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டன. புதுடெல்லியில் அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை அதிபர் வழங்கினார். படம்: தமிழக ஊடகம்

12 தமிழக மீனவர்கள் கைது

ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாகக் கூறப்பட்டது.

அப்போது அங்கு கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 12 பேரையும் கைது செய்ததாகவும் கைதான மீனவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகளைப் பறிமுதல் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டடது.

மீனவர்கள் கைதானதால் புதுக்கோட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மத்திய, மாநில அரசுகள், இலங்கையின் கைது செயலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.