சென்னை: உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடப்பு சட்டப்பேரவைக்கூட்டத்தொடரில் மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அத்தீர்மானத்தை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை அனுப்பி பிரதமரையும் மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெவ்வேறு காரணங்கள், காலச்சூழல் காரணமாக தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிப்பது தடைபட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
"சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அதை செயல்படுத்த முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்பது நீண்ட நாள்களுக்கு முந்தையது என்பதாலும், அதன்பின் சூழ்நிலை மாறியிருப்பதாலும் தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கும் முயற்சி மீண்டும் தொடங்கப்பட வேண்டும்," என்பதே ராமதாசின் கோரிக்கையாகும்.
சென்னை உயர் நீதிமன்றம் மட்டுமன்றி, கர்நாடகம், குஜராத், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றத்திலும் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கருத்துரு பற்றி உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ஆனால், அந்த கருத்துருவை ஏற்க உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வு மறுத்து விட்டதாகவும் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அதை தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடுகள் மாநில மொழிகளுக்கு எதிரானவை எனச் சாடி உள்ளார்.
"சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
"அத்தீர்மானம் கொண்டுவரப்படுவதற்கு பாமக கொடுத்த அழுத்தம் தான் காரணமாக இருந்தது. ஆனால், அதன் பின் 17 ஆண்டுகள் ஆகியும் தமிழ் அலுவல் மொழியாகவில்லை," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசு எவ்வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு தான் தடையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

