சென்னை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனில் நாடு முழுவதும் மாற்று அணி ஒன்று உருவாக வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என கூட்டணி கட்சிகளோடு கலந்தாலோசிக்காமல் அறிவிக்கப்பட்டதால், அந்த அணி சிதறுண்டு போனதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"பிரதமரை விமர்சிக்கவே கூடாதா, அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா என்று கேள்வி எழுப்பிய அவர், அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
நிலைமை இவ்வாறு இருக்க, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு தண்டனை விதித்து இருப்பதை படிக்கும்போது தமக்கு சிரிப்பு வருவதாக சீமான் தெரிவித்தார்.
"கடந்த மக்களவைத் தேர்தலின்போது அவசர முடிவுகளை எடுத்ததுபோல் அடுத்த முறையும் எதிர்க்கட்சிகள் செயல்படக்கூடாது. பழையபடி செயல்பட்டால் சிக்கல் ஏற்படும்.
"நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்துதான் போட்டியிடும். எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்க மற்ற கட்சிகள் முன்வருமா என்பது குறித்து இப்போதே ஏதும் கூற இயலாது," என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.

