சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ள இணைய வழி சூதாட்டத்துக்கு எதிரான புதிய சட்ட மசோதா நேற்று ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சட்ட மசோதா சில மாதங்களுக்கு முன்பே பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. எனினும், அதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டார். மேலும், அதற்கான காரணங்களையும் அவர் விவரித்திருந்தார்.
இந்நிலையில், இணையவழி சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. அது நேற்று ஆளுநரின் பார்வைக்கும் ஒப்புதலுக்கும் தமிழக அரசால் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இணைய வழி சூதாட்டத்துக்குத் தடைவிதிப்பதற்கான காரணங்களை தமிழக அரசு விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சட்டத்தை இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதாகவும் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
எந்தவொரு மசோதாவாக இருந்தாலும் மாநில சட்டப்பேரவையில் இருமுறை நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டால் அவர் தனது ஒப்புதலை வழங்கியே ஆக வேண்டும். எனவே இம்முறை ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்பது உறுதி," என திமுக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இணையவழி சூதாட்ட தடைச்சட்ட மசோதா தொடர்பாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நிலவி வரும் மறைமுக மோதல் முடிவுக்கு வருமா என்பது விரைவில் தெரியவரும்.

