செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

ஆயுர்வேத துறையில் முதலீடு: மோசடி செய்த நான்கு நைஜீரியர்கள் கைது

சென்னை: ஆயுர்வேத தொழிலில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி சென்னையைச் சேர்ந்தவரிடம் ரூ.33 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நால்வர் கைதாகினர். சென்னையைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர், ஆயுர்வேத மூலப் பொருள்களை விநியோகிக்க அனைத்துலக அளவில் வணிகக் கட்டமைப்பை உருவாக்க உள்ளதாகவும் இது தொடர்பில் முதலீடுகளை எதிர்பார்ப்பதாகவும் மின்னஞ்சல் வழி நைஜீரியர் ஒருவர் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார். "ஆனால் சொன்னபடி கமிஷன் எதையும் தரவில்லை. மொத்த பணத்தையும் மோசடி செய்துவிட்டார்," என்று விஜயராகவன் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். விசாரணையில் நைஜீரிய குடிமக்கள் நால்வர் மும்பையில் முகாமிட்டு, இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. தமிழக தனிப்படை காவலர்கள் விரைந்து சென்று அவர்களைக் கைது செய்துள்ளனர்.

மணிப்பூரில் இருந்து வந்த போதைப் பொருள்களை விற்ற இருவர் கைது

சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் இருந்து போதைப் பொருள்களைக் கொண்டு வந்து சென்னையில் விற்பனை செய்த இருவரை காவல்துறை கைது செய்தது. நேற்று முன்தினம் சென்னைப் புறநகர்ப் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது ஒன்பது கிலோ போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் சந்தை மதிப்பு பத்து லட்சம் ரூபாயாகும். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையின்போது மணிப்பூரில் இருந்து இந்தப் போதைப் பொருள்களைப் பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்தனர். தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவில் அங்கு சென்று விசாரணை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

கட்சியை விட்டு திடீரென விலகினார் சேலம் மாவட்ட பாஜக செயலாளர்

சேலம்: தமிழக பாஜக நிர்வாகி ஒருவர் திடீரென அக்கட்சியில் இருந்த விலகியுள்ளார். பாஜகவின் சேலம் மாவட்ட செயலாளர் சோலைக்குமரன் எடுத்துள்ள இந்த திடீர் முடிவு அக்கட்சி வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மற்ற நிர்வாகிகளின் செயல்பாடு தமக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும் அதன் காரணமாக கட்சியிலிருந்து விலகுவதாகவும் குறிப்பிட்டார்.

பாதிரியார் வழக்கு: விசாரணைக்கு வர வேண்டிய இளம் பெண் மாயம்

குமரி: தேவாலயத்துக்கு வந்த பெண்களை மயக்கி, மிரட்டி ஆபாச காணொளிகளைப் பதிவு செய்த குமரி பாதிரியார் பெனடிக்ட் வழக்கில் காவல்துறை விசாரணைக்கு வர வேண்டிய பெண் ஒருவர் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண்ணுக்கு என்னவானது என்பதைக் கண்டறிய புது விசாரணை தொடங்கி உள்ளது. இதனால் விசாரணையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த இளம்பெண்தான் முக்கிய சாட்சி என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பாதிரியாருடன் தொடர்புடைய காணொளிப் பதிவுகளை இணையத்தில் பகிர்ந்தது யார் என்பது குறித்தும் விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.