செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
61df400b-f617-4e74-b363-7c34648b1d76
-

மின்னல் தாக்கி தீக்கிரையான பண்ணை; 5,000 கோழிகள் பலி

தர்மபுரி: தர்மபுரியில் உள்ள மலைதாங்கி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 5,000 கோழிகள் உயிரிழந்துவிட்ட தாக பாதிக்கப்பட்ட வர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலை பெய்த மழையின்போது திருப்பதி என்பவரது கோழிப்பண்ணையில் மின்னல் தாக்கியது. அப்போது பண்ணையில் இருந்த கோழிகள் பலியாகிவிட்டதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். இடி தாக்கியதில் கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிவதைக் கண்டு தனது சகோதரர் விவரம் தெரிவித்ததாகவும் தனது மனைவி, சகோதரருடன் சேர்ந்து தீயை அணைக்க முயற்சி செய்ததாகவும் திருப்பதி கூறினார். எனினும் அந்தச் சிறிய பண்ணை முற்றிலுமாக அழிந்து தீக்கிரையானது.

750 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தைக்கான பிணைய பத்திரம்

மதுரை: தமிழகத்தின் தென்மண்டலத்தில் உள்ள பத்து மாவட்டங்களிலும் கஞ்சா புழக்கம் அறவே குறைந்துள்ளதாக காவல்துறை ஐஜி அஸ்‌ரா கார்க் தெரிவித்துள்ளார். கடந்த 79 நாள்களில் மட்டும் அம்மண்டலத்தில் உள்ள பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 750 கஞ்சா குற்றவாளிகளிடம் நன்னடத்தைக்கான பிணைய பத்திரம் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்க தொடந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

'கல்விக் கொள்கை வகுப்பதில் மாநிலங்களுக்குச் சுதந்திரம் தேவை'

சென்னை: தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 3, 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்கூட பொதுத்தேர்வை நடத்தச் சொல்கிறது மத்திய அரசு என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டார். "இந்திய மாநிலங்கள் மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டுள்ளன. அதனால் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற கல்விக் கொள்கையை உருவாக்க அதிக உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப் பட்டுள்ளது," என்றார் அமைச்சர் பொன்முடி.

நிதி நிறுவன மோசடி: நான்கு பெண்கள் உட்பட ஆறு பேருக்கு பத்தாண்டு சிறை

கோவை: நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து மோசடி செய்த நான்கு பெண்கள் உட்பட ஆறு பேருக்கு நீதிமன்றம் பத்தாண்டு சிறைத்தண் டனை விதித்துள்ளது. கோவையில் 'ஒயிட் காலர் அசோசி யேட்ஸ்' என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீடு செய்யப்படும் பணத்துக்கு அதிக வட்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை நம்பி இந்நிறுவனத்தில் ஏராளமானோர் பணம் செலுத்தினர். தொடக்கத்தில் வட்டிப்பணம் அளித்த இந்நிறுவனத்தார் பின்னர் பணமில்லை என்று கூறத் தொடங்கினர். காவல்துறையில் புகார் குவிந்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது. நிறுவனத்தை நடத்திய இரு ஆடவர்கள், நான்கு பெண்கள் கைதாகினர். மொத்தம் ரூ.63 லட்சம் வசூலித்து மோசடி செய்ததாக இவர்கள் மீது கோவை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலை யில் ஆறு பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.72 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். முதலீட்டாளர்களுக்குப் பணத்தை திருப்பிக் கொடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

இந்தி மொழி அமலாக்க சுற்றறிக்கை: மதுரை எம்பி வெங்கடேசன் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 100% இந்தி மொழி அமலாக்க சுற்றறிக்கையை தென்னக ரயில்வே பொதுமேலாளர் திரும்பப் பெறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் உரிய முறையில் அலுவல் மொழி ஆய்வுக்குழுவுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.