சிவகங்கை: கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள தொல்பொருள்கள் தமக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்துவதாக இந்தியாவுக்கான மெக்சிகோ நாட்டின் தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தூதர் பெடரிக்கோவும் மெக்சிகோ தூதரக அதிகாரிகளும் இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தந்தனர்.
பின்னர் அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்துப் பொருள்களையும் பார்வையிட்ட அவர், தனது வியப்பை வெளிப்படுத்தியதாகக் கீழடி ஊராட்சி மன்றத் தலைவர் கூறினார். தொல்பொருள்களின் வரலாறு குறித்தும் தமிழர்களின் பாரம்பரியம் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் அவர் அனைத்துத் தகவல்களையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.
மேலும் 7ஆம் கட்ட அகழாய்வு நடந்த தளம் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதை அறிந்து அதனையும் மெக்சிகோ தூதர் பார்வையிட்டதாகவும் கீழடி அருங்காட்சியகத்திற்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை புரிவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

