சென்னை: ஜி-20 கூட்டமைப்பின் இரண்டாவது நிதி கட்டமைப்புப் பணிக்குழு மாநாட்டில், உணவு, எரிசக்தி, பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இம்மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஐநா அமைப்பின் வர்த்தக, மேம்பாட்டுப் பிரதிநிதி ஆண்ட்ரூஸ் மைக்கேல் ராண்டன், மாநாட்டின் பொது அமர்வில் பொதுவான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மற்றொரு அமர்வில் பணவீக்கம், இன்றைய உலகளாவிய பொருளியல் நிலை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
உலக வங்கி, ஆசிய வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள், பொருளியல் ஊக்க நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரான்ஸ் பிரதிநிதி ஜுலியன் தெரிவித்தார்.
ரஷ்யப் பிரதிநிதி டிட்டியனா லுதினா, மாநாடு சிறப்பாக நடைபெற்றதாக குறிப்பிட்டார்
கல்வி, நிதி, எரிசக்தி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கருத்தரங்குகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

