வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிப்பு எதுவும் இல்லை என கவலை, ஏமாற்றம்
தர்மபுரி: தமிழ்நாட்டில் காவிரி உபரிநீர் சேமிப்புத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும்படி விவசாயிகள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய அந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது தங்களுக்குப் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது என்று வருத்தம் தெரிவித்தனர்.
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 வேளாண்மை வரவுசெலவுத் திட்டத்தில் காவிரி உபரிநீர் சேமிப்புத் திட்டம் இடம்பெறாமல் போனது தங்களுக்குப் பெரும் ஏமாற்றமாகிவிட்டது என்றும் அவர்கள் கூறினர்.
அந்தத் திட்டத்தின்படி மழைக்காலத்தில் காவிரியில் பெருக்கெடுத்து வரும் உபரிநீரை ஏரிகளுக்கும் குளம்குட்டைகளுக்கும் திருப்பிவிடுவது இலக்கு. அப்படிச் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
ஆனால், அரசாங்கம் இதுவரையில் எந்தவோர் அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இதனிடையே, இது பற்றி கருத்து கூறிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சின்னசாமி, காவிரி உபரிநீர் சேமிப்புத் திட்டம் உடனடியாகத் தேவைப்படும் ஒன்று என்று வலியுறுத்திக் கூறினார்.
குறிப்பாக தர்மபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மழை ஒன்றுதான் தண்ணீருக்கான வழியாக இருக்கிறது.
சென்ற ஆண்டு அதிக மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பின. ஆனால், இந்த ஆண்டும் அதே சூழ்நிலை இருப்பதற்கு உத்தரவாதம் இல்லை.
ஆகையால், மாநிலம் முழுவதுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

