பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை வளர்ச்சியடைய வேண்டிய ஒரு மாநிலமாக பாஜக பார்ப்பதாகவும் ஆனால், காங்கிரஸ்காரர்கள் கர்நாடகாவை பணம் கொடுக்கும் ஏடிஎம் இயந்திரமாகப் பார்ப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி காரசாரமாக குற்றம் சுமத்தினார்.
கர்நாடக மாநிலத்தின் தாவனகரே நகரில் நடந்த விஜய் சங்கல்ப் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், காங்கிரசிடம் கர்நாடக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
இல்லை என்றால் இமாச்சலப் பிரதேசத்தில் அந்தக் கட்சி நடந்து கொண்டதைப் போலவே கர்நாடகத்திலும் மக்களை காங்கிரஸ் ஏமாற்றிவிடும் என்று அவர் எச்சரித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏராளமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ் கட்சி, அண்மையில் அங்கு வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தது.
ஆனால், வாக்குறுதிகளில் ஒன்றுகூட வரவுசெலவுத் திட்டத்தில் இல்லை.
இதுதான் காங்கிரஸ் கட்சியின் அரசியல் லட்சணம் என்று பிரதமர் மோடி சாடினார். பொய் வாக்குறுதிகளை அள்ளிவிடும் காங்கிரசை கர்நாடகாவில் காலூன்றவிடலாமா என்றும் பிரதமர் திரு மோடி வினவினார்.
"காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல கனவு காண்கிறது. ஆனால், கர்நாடக மக்களோ தங்கள் மாநிலத்தில் எப்படியும் தாமரையை மலரச் செய்துவிட வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார்கள்.
"கொவிட்-19 சூழலில்கூட கர்நாடக மாநிலம் அதிக முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்தது. இந்தச் சாதனையைப் படைத்த முதல்வருக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது," என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
இதனிடையே, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கெண்டுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா பிதார் என்ற நகரில் 103 அடி உயர தேசிய கொடி ஒன்றை ஏற்றி வைத்தார்.
சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவகம் ஒன்றையும் திறந்துவைத்தார்.
பிறகு அந்த நகரில் உரையாற்றிய அமித் ஷா, கொரோட்டா கிராமத்தில் அன்று 2.5 அடி உயர மூவர்ண கொடியை ஏற்றியதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட அதே நிலத்தில் இப்போது 103 அடி உயர மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது என்று பெருமிதத்துடன் கூறினார்.

