திண்டுக்கல்: தமிழக மக்கள் நட்பைப் பேணுவதிலும் வரவேற்பு அளிப்பதிலும் சிறந்தவர்கள் என குஜராத் அமைச்சர் ருஷிகேஷ் பாய் பட்டேல் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மொழி பேசும் மக்களும் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான, அமைதியான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிர, தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் உள்ள சௌராஷ்டிர மக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என குஜராத் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற சங்கமம் நிகழ்ச்சியில் அமைச்சர் ருஷிகேஷ் பாய் பட்டேல் கலந்து கொண்டார்.
இதனிடையே, குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு வருகை புரிந்தனர். அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் சௌராஷ்டிர சபா சார்பாக பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்றனர். கோலாட்டத்தால் ஈர்க்கப்பட்ட அமைச்சர் குபேர்பாய் திண்டோரும் அப்பெண்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடி மகிழ்ந்தார்.

