செய்திக்கொத்து

2 mins read

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் தொல்லை; விசாரணைக்கு உத்தரவு

சென்னை: கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் பணி ஆற்றும் ஆசிரியர் ஒருவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அக்கல்லூரியின் முன் னாள் இயக்குநர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டுமென தமிழக காவல்துறை தலைவருக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை ஏற்று டிஜிபி சைலேந்திர பாபு விசாரணை நடத்த உத்தர விட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனி டையே, தமக்குப் பாலியல் தொல்லை ஏதும் இல்லை என்று பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 24 வயது மாணவி தெரிவித்திருப்பது விசாரணையில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமக்கும் கல்லூரியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சி நடப்பதாக அவர் காவல்துறை யில் புகார் அளித்துள்ளார்.

பத்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலைக் குற்றவாளி கைது

சென்னை: ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றாவளி திடீரென தலைமறைவாகி, பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் காவல்துறையிடம் சிக்கி உள்ளார். சென்னையைச் சேர்ந்த 38 வயதான நாகூர் மீரான் என்பவர் கடந்த 2012ஆம் ஆண்டு ஹாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் கைதானார். அந்த வழக்கில் நிபந்தனை பிணை பெற்று வெளியே வந்த அவர், திடீரென தலைமறைவானார். பத்து ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த நிலையில், அவர் ஆந்திர மாநிலம், கடப்பா பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. காவல்துறையின் தனிப்படையினர் அங்கு சென்று அவரை கைதுசெய்தனர். இதற்கிடையே அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மீது மேலும் ஐந்து கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவமனையிலிருந்து குழந்தையைக் கடத்திய பெண் கைது

திருப்பூர்: அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட, பிறந்து ஏழு நாள்களே ஆன பச்சிளங் குழந்தையை 12 மணி நேரத்தில் காவல்துறை மீட்டது. இது தொடர்பாக பாண்டியம்மாள் என்ற பெண் கைதாகியுள்ளார். இந்தச் சம்பவம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்தது. திருமணமாகி பல ஆண்டுகளாகக் குழந்தை பிறக்காததால் கடத்தலில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

இன்ஸ்டகிராம் மூலம் ஆண்களை ஏமாற்றி பணம் சுருட்டிய பெண் கைது

கோவை: இன்ஸ்டகிராம் மூலம் வசதியான ஆடவர்களைத் தொடர்புகொண்டு ஆசை வார்த்தைகள் கூறி பணம் சுருட்டிய ஹேசல் ஜேம்ஸ் என்ற பெண்ணை கோவை காவல்துறை கைதுசெய்துள்ளது. இன்ஸ்டகிராம் மூலம் அறிமுகமான மும்பையைச் சேர்ந்த 44 வயதான ராஜேஷ் என்பவரிடம் இரு குழந்தைகளுக்குத் தாயான தமக்குக் கணவரின் ஆதரவு இல்லை, தொழில் தொடங்க வசதி இல்லை என்று பல்வேறு விதமாகப் பேசி ரூ.20 லட்சம் ரொக்கம், சொகுசு கார், கைப்பேசி என பலவற்றைக் கறந்துள்ளார் ஹேசல் ஜேம்ஸ். இந்நிலையில் அவருக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான ராஜேஷ், தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ஹேசல் ஜேம்ஸ். இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்தார் ராஜேஷ்.