செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமானச் சேவை

மதுரை: விமான நிலைய விரிவாக்கப் பணி துரித கதியில் நடைபெற்று வருவதையடுத்து மதுரை விமான நிலையத்தில் அடுத்த மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ரூ.35 கோடியில் சுற்றுச் சுவர்கள் எழுப்புவது உள்ளிட்ட பணிகளும்் ரூ.75 கோடியில் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைப்பு

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான செயல் திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.1.35 கோடி மதிப்புள்ள இந்தப் பணியைப் பெறுவதற்காக நான்கு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளிகளைத் தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில் ஆர்.வி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்திற்கு அந்தப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமையும் இடம் உள்ளிட்டவை இடம்பெறும் எனத் தெரிகிறது.

கறுப்பு மை வாளி, ஏணியோடு வர நேரிடும் என ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள கடைகளில் அடுத்த ஒரு மாதத்துக்குள் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில், கறுப்பு மை வாளியோடும் ஏணியோடும் வர நேரிடும் என வணிகர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் பயன்பாட்டில் உள்ள பிற மொழி கலந்த தமிழ்ச் சொற்கள், அவற்றுக்கு இணையான தனித்தமிழ்ச் சொற்கள் குறித்த பதாகை சென்னை, தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்த ராமதாஸ், கடைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது தொடர்பாக கடை உரிமையாளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தமிழை தொலைத்துவிட்டோம் என்றும் தமிழ் எது, பிறமொழி எது என தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'மக்களைத் தேடி மேயர் திட்டம்'

சென்னை: மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் வைத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் நேரடியாகப் பெறப்படும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதற்காக 'மக்களைத் தேடி மேயர் திட்டம்' வருகிற நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசியபோது அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே 'நம்ம சென்னை செயலி' மூலமாக பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.