'ஆண்டுக்கு ரூ.12,000 என்பது பெண்கள் சுயமரியாதையுடன் வாழ உதவும்'
சென்னை: குடும்பத் தலைவிகளின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இத்திட்டத்தால் பயனடையும் பெண்களின் வங்கி கணக்கிற்கே உரிமைத்தொகை செலுத்தப்படும் என்றும் மொத்தம் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் நேற்று சட்டப்பேரவையில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
"மீனவப் பெண்கள், சிறு கடை வைத்திருக்கும் பெண்கள், ஒரே நாளில் பல்வேறு இல்லங்களில் பணிபுரியும் பெண்கள், கட்டடப் பணியாளர்கள், குறைந்த ஊதியத்துக்கு வேலை பார்க்கும் பெண்கள் எனப் பலர் பயனடைவர்," என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
ஆண்டுக்கு ரூ.12,000 என்பது பெண்கள் சுயமரியாதையுடன் வாழ உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டை வளமான வலிமையான மாநிலமாக உருவாக்க மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
"சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய், மனைவி, சகோதரி என ஓர் ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார்.
"மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, யார் யாருக்கெல்லாம் கிடைக்கும், கிடைக்காது என எல்லோரும் மனக்கணக்கு போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்," என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தத் திட்டத்தின் மூலம் வறுமை குறைய வாய்ப்பு உள்ளது என்றும் குழந்தைகள் கல்வி மேம்படும் என்றும் குறிப்பிட்ட அவர், பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்ற அடிப்படையிலும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.
"பெண்கள்தான் கிராம பொருளாதாரத்தை சுமக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.