திண்டுக்கல்: தந்தையின் சடலத்தின்முன் நின்று மானசீகமாக ஆசி பெற்று 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுஎழுதிய மாணவனைப் பலரும் பாராட்டி ஆறுதல் கூறினர்.
கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்தவர் ரிபாஸ் ஆண்டனி. 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ரிபாஸ் ஆண்டனியும் தேர்வெழுதி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை ரிபாஸ் தேர்வு எழுத பள்ளிக்குச் செல்ல தயாரான நிலையில், உடல்நலக்குறைவால் அவரது தந்தை காலமானது தெரியவந்தது.
துடிதுடித்துப் போன ரிபாஸ், முதலில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். பின்னர் பொதுத்தேர்வை எழுதி முடிப்பதுதான் தன் தந்தையின் விருப்பமாக இருக்கும் என்று அவர் முடிவு செய்தார்.
இதையடுத்து, விடுப்பு எடுக்காமல் தேர்வை எழுத அவர் தயாரானார். உறவினர்களும் நண்பர்களும் அவருக்கு ஆறுதல் கூறித் தேற்றினர்.
தந்தையின் சடலத்தை வீட்டில் வைத்து, மானசீகமாக ஆசிபெற்றார் ரிபாஸ். பின்னர் கனத்த இதயத்துடன் பள்ளிக்குச் சென்று தேர்வை எழுதி முடித்த அவர், பின்னர் வீடு திரும்பியதும் மகன் என்ற முறையில் தந்தைக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார்.
பொதுத்தேர்வு எழுதிவிட்டு தந்தையின் சடலத்தை ரியாஸ் சுமந்து சென்றதைப் பார்த்து அப்பகுதி மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

