ஒரே மையத்தில் 2,000 பேர் தேர்ச்சி: விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்து
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் பேரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்களில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனரா என்ற விவரங்களை தாம் கோரியுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்களில் வந்த செய்தியைப் பார்த்ததும், தமிழக அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளருக்கு அச்செய்தியை அனுப்பி வைத்ததாகவும் தேர்வாணைய அதிகாரிகளிடம் உரிய பதில்களைப் பெற்றுத் தருமாறு அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் 'குருப் நான்கு' போட்டித் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இத்தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
ஒரே மையத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அடுத்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
"அரசுத் தேர்வாணையம் நடத்தியுள்ள தேர்வுகள் குறித்து பொதுவெளியில் வந்த தகவலுக்கும் என்னிடம் தேர்வாணைய அதிகாரிகள் கொடுத்த விவரங்களுக்கும் சம்பந்தமே இல்லை.
"ஒரே மையத்தில் இரண்டாயிரம் பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர், எத்தனை மையங்களை நடத்துகிறார், எங்கு நடத்துகிறார் என்பது குறித்து உரிய தகவல் என்னிடம் இல்லை," என்றார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
கடந்த காலங்களிலும் இதேபோல் ஒரே தேர்வு மையத்தில் இதே போன்ற தேர்வு முடிவுகள் வந்துள்ளனவா என்பது குறித்து தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்பது என்பதைவிட விரிவான விசாரணைக்கு உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா என்பது குறித்து தமிழக முதல்வர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் முறைகேடு நடந்துள்ளதா என்பதை அரசாங்கம் கண்டறிய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனால் தமிழக அரசு வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

