திருப்பத்தூர்: மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு காலதாமதமாக வந்த அரசு அதிகாரிகளை கூட்டம் நடைபெற்ற அரங்குக்கு வெளியே தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
அம்மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை குறைதீர்வு கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினமும் அக்கூட்டம் நடைபெற்றபோது, ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குறித்த நேரத்துக்குள் வந்து சேர்ந்தார்.
எனினும், கூட்ட அரங்கில் குறைந்த எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகள் மட்டுமே காணப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், எந்தெந்த அதிகாரிகள் வரவில்லை என விசாரித்தார். பின்னர் அவரது உத்தரவின் பேரில் கூட்டம் நடைபெற்ற அரங்கின் வாயில் கதவுகள் மூடப்பட்டன.
சில அதிகாரிகளை மட்டுமே கொண்டு மக்கள் குறைதீர்வு கூட்டத்தை தொடங்கிய ஆட்சியர், தாமதமாக வந்த அதிகாரிகளை அரங்குக்குள் அனுமதிக்க வேண்டாம் என பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனால் தாமதமாக வந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் நுழைவு வாயில் அருகே காத்துக்கிடந்தனர்.
கூட்டம் முடிவடைந்த பின்னர், பொதுமக்கள் நமக்கு முன்பாகவே இங்கு வந்து மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர் என்றும் அவர்களது உணர்வுக்கும் எதிர்பார்ப்புக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும் என்றும் தாமதமாக வந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஆட்சியர்.

