மேலும் எட்டு இலங்கை
அகதிகள் தமிழகம் வருகை
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்த இலங்கைத் தமிழர்கள் எட்டுப் பேர், கடல்துறை காவலர்களின் விசாரணைக்குப் பின் மண்டபம் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கையில் நிலவும் பொருளியல் நெருக்கடியால் கடந்த ஆண்டு மார்ச் முதல் இதுவரை இலங்கைத் தமிழர்கள் 225 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
ஷார்ஜாவுக்கு கோவை மாம்பழம்
கோவை: கோவை அனைத்துலக விமான நிலைய வளாகத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மாம்பழப் பருவம் தொடங்குவதால் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பற்களைப் பிடுங்கிய விவகாரம்: காவல்துறை அதிகாரி இடைநீக்கம்
சென்னை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற 30 பேரின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக தாக்கியதாக புகார் எழுந்தது. இதன் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது.
இது பற்றி நேற்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், இந்த விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ஈஸ்வரி: திருடத் தூண்டியதே ஐஸ்வர்யாதான்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த ஈஸ்வரி என்கிற பெண் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடியது தெரியவந்தது.
இதன் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், தன்னைத் திருடத் தூண்டியதே ஐஸ்வர்யாதான் என்று ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
"நிறைய சம்பளம் கொடுத்திருந்தால் நான் ஏன் திருடப் போகிறேன். ரூ.30,000தான் கொடுத்தார்கள்.
அது போதவில்லை. அதனால்தான் திருடினேன்," என்று அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளதாகத் தகவல்கள் கூறின.

