உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் நெடுமானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, 65, என்ற கூலித்தொழிலாளி, குடும்பப் பிரச்சினை காரணமாக கோபித்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டார்.
கவுண்டமணி, 30, செந்தில், 28, என்ற அவருடைய இரண்டு மகன்களும் மகளும் தந்தையை பல இடங்களிலும் பல நாள்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு காட்டுப் பகுதி யில் முதியவரின் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்ததைக் கண்ட ஆடு மேய்ப்பவர்கள் அது பற்றி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவரை அடையாளம் காண அதிகாரிகள் முயன்றனர்.
சுப்பிரமணியின் உருவ அமைப்பும் மாண்டவரின் உருவ அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததால் மாண்டவர் சுப்பிரமணிதான் என புதல்வர்கள் முடிவு செய்தனர்.
உடலை தங்கள் கிராமத்திற்கு கொண்டுவந்து சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றபோது, சுப்பிரமணி (படம்) கடைத்தெருவில் டீ குடித்துக்கொண்டு இருப்பதாக உறவினர் ஒருவர் கூறியதைக் கேட்டு வியப்புமிகுதியில் தந்தையைத் தேடி ஓடினர்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

