திருச்சி: திருச்சி மாநகரத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 68 கி.மீ. தொலைவுக்கு மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயங்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ சேவை தொடர்பாக பேசிய மேயர் அன்பழகன், "சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம், அதுவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், மத்தியப் பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ. தூரத்துக்கு இரண்டாவது வழித் தடம், திருச்சி சந்திப்பில் இருந்து பஞ்சப்பூர், விமான நிலையம், புதுக்கோட்டை சாலை வழியாக ரிங்ரோடு வரை 23.3 கி.மீ. தொலைவுக்கு மூன்றாவது வழித் தடத்திலும் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.
சென்னையைத் தொடர்ந்து மதுரை, கோவை, திருச்சியிலும் இந்த மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ள நிலையில், சென்னை-கோவைக்கு இடையே 12வது வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. ஏப்ரல் 8ஆம் தேதி இதனைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ளார்.

