தமிழக தயிர்ப் பொட்டலங்களில் இந்தி: மத்திய அரசு காலக்கெடு
சென்னை: தயிர் என்ற சொல்லை இந்தியில் எழுதவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியைத் திணிப்பவர்களுக்குத் தென்னகத்தில் இடமில்லாமல் போய்விடும் என்று எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஆவின், கர்நாடகாவின் நந்தினி தயிர் பொட்டலங்களில் 'தயிர்', 'Curd' என்ற சொற்கள் இடம்பெற்று உள்ளன.
இவற்றில் ஆங்கில வார்த் தையை நீக்கிவிட்டு 'தஹி' என்ற இந்திச் சொல்லைக் கட் டாயம் அச்சிடவேண்டும் என்றும் தமிழில் 'தயிர்', கன்னடத்தில் 'மொசரு' போன்ற வார்த்தைகளை அடைப்புக்குறிக்குள் பயன் படுத்தலாம் என்றும் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மாநில மக்களிடம் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், 'மத்திய அர சின் இந்தி திணிப்பு முயற்சி ஒரு போதும் நிறைவேறாது' என சமூக ஊடகங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தனது கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
'உணவுப் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு ஆணையம், முதலில் தாய்மொழியைக் காக்க நாங்கள் சொல்வதையும் கேட்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
தமிழ், கன்னடம் பேசும் மாநிலங்களில் தயிர் பொட்டலங்களில்கூட இந்தியை எழுதச் சொல்வது குறிப்பிட்ட மாநில மக்களின் தாய்மொழியைத் தாழ்த்தும் அளவுக்கு வந்துள்ள தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மக்களின் உணர்வுகளை மதித்து இந்தித் திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் யாருக்கும் வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்.
"இரு மாநில மக்களின் தாய்மொழியை அலட்சியப்படுத்துபவர்களுக்கு எந்தக் காலத்திலும் தென்னகத்தில் இடமில்லாமல் போய்விடும்," என மு.க.ஸ்டாலின் காட்டமாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஆவின் தயிர் பொட்டலங்களில் 'தஹி' என இந்தியில் அச்சிடப்படாது என பால்வளத் துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்துள்ளார்.
"ஆணையத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்கவில்லை. இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்பதால் இதனை நடைமுறைப்படுத்தப் போவதில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில், நடைமுறைப்படுத்த சாத்தியமில்லை என ஆவின் நிறுவனம் பதிலளித்துள்ளது.
இதனிடையே, உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் தலைவர் ராஜேஷ் பூஷணுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தியில் எழுதும் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு கூறியுள்ளார். இவ்வறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை என்றும் அவர் மாநில மொழிகளை ஊக்குவித்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

