செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e765fdec-6492-4b5c-a311-d0ee6d67efe3

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் விழா நடத்தப்படும்

புதுச்சேரி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரி அரசின் சார்பில் விழா நடத்தப்படும் என்றும் அரசு ஊதியம் பெற்று கடந்த ஆட்சியில் நீக்கப்பட்டோருக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

36 எருமைகளுடன் லாரி பறிமுதல்

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் காவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மூடப்பட்டு வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 36 எருமை மாடுகள் இருந்தன. ஆந்திர மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் விற்பனை செய்வதற்காக ஏற்றி வரப்பட்ட எருமைகளையும் லாரியையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். படம்: தமிழக ஊடகம்

நரிக்குறவர்களைப் படம் பார்க்க அனுமதி மறுத்தவர் மீது வழக்கு

சென்னை: நடிகர் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியான நிலையில், இந்தப் படத்தைக் காண பழங்குடியினத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்துள்ளனர். ஆனால், அவர்களைப் படம் பார்க்க அனுமதிக்கவில்லை என புகார் கூறப்பட்டது. இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அமைந்தகரை தாசில்தார் மாதவன் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.இதையடுத்து, நரிக்குறவர் மக்களைப் படம் பார்க்க விடாமல் அனுமதி மறுத்த திரையரங்குப் பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா

சென்னை: தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களின் பாதுகாப்பைக் கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என போக்கு வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். அத்துடன், போக்குவரத்துத் துறை தனியார் மயம் ஆக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.