உசிலம்பட்டி: கால்நடைகளுக்கான புல், வைக்கோல், புண்ணாக்கு உள்ளிட்ட தீவனம், மருத்துவம், பராமரிப்புச் செலவுகள் அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் பால் கொள்முதல் செய் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தித் தரவேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலி யுறுத்தி மதுரை மாவட்டத்திலும் கடந்த இரு வாரங்களாக உசிலம் பட்டி, மேலூர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலைக் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று காலை உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் சாலையில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் வந்து சாலையில் பாலைக் கொட்டி திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசு பால் கொள்முதல் விலையை ரூ. 7 முதல் ரூ.10 வரை உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், "தீவனம், பராமரிப்புச் செலவுகள் அதிகரித்து வருவதால் கால்நடைகளை வளர்ப்போர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தித் தரவேண்டும். அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும்," என்றனர்.
கருமாத்தூரில் பால் உற்பத்தியாளர்கள் நேற்று காலை சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர். படம்: தமிழக ஊடகம்

