சென்னை: ராகுல்காந்தியின் எம்.பி. பதவிப் பறிப்புக்கு எதிராக தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முழுவதும் தொடர்போராட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "ராகுல்காந்தி பதவி பறிப்பு, அதானி விவகாரம் குறித்து நாடு முழுவதும் ஒரு மாதகால தொடர் போராட்டங்களை நடத்த உள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது.
"அதன்படி பாஜக ஆட்சியை எதிர்த்து 'பாஜகவின் ஜனநாயகப் படுகொலை' என்ற தலைப்பில் பிரசாரக் கையேடு இன்று மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்படும்.
"ஏப்ரல் 3ஆம் தேதி, சென்னையில் அம்பேத்கர் அல்லது காந்தி சிலைமுன்பு காங்கிரஸ் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெறும். அத்துடன், இளைஞர், மாணவர் காங்கிரஸ், இதர துறைகள் சார்பில் பிரதமர் மோடிக்கு அஞ்சல் அட்டைகள் மூலம் கேள்விகள் எழுதி அனுப்பும் போராட்டம் நடைபெறும்.
"மகளிர் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பெருந்திரளான மகளிர் காங்கிர சார் பங்கேற்க உள்ளனர்.
"தமிழகத்தில் ஆருத்ரா நிதி நிறுவன ஊழலுக்கு பின்னால் தமிழக பாஜக உள்ளது. அது தொடர்பான விசாரணையை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விசாரிக்கவேண்டும்," என்று கூறினார்.
இதனிடையே, சென்னை சைதாப்பேட்டையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை சாதாரண உடையில் இருந்த காவலர்கள் தாக்கியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவர் மயக்கமடைந்தார்.
இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மூன்று மணி நேரமாக போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
திண்டுக்கல், உடுமலைப் பேட்டையில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.

