அம்மா உணவகம் மூடப்படாது
சென்னை: அம்மா உணவகத்தை மூடும் எண்ணமில்லை என சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். "இதுவரை செயல்பட்டு வந்த அம்மா உணவகம் எந்த ஓர் இடத்திலும் மூடப்படவில்லை. ஒரு உணவகத்தில் மாதத்துக்கு 4,000 ரூபாய் வருமானம் வருகிறது என்றால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதம் 6,000 சம்பளம் வழங்க வேண்டியுள்ளது. அம்மா உணவகங்களுக்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உனவகங்களுக்கு இந்த ஆண்டு 129 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வருமானம் 15 கோடி தான் வருகிறது", என அவர் தெரிவித்தார்.
போலி காணொளி: பீகார் ஆடவர் மதுரை நீதிமன்றத்தில் முன்னிலை
மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போன்ற போலி காணொளியைத் தயாரித்து வெளியிட்ட விவகாரம் தொடர்பில் அண்மையில் மணீஷ் காஷ்யப் என்பவர் பீகாரில் கைதானார். அவரை தமிழகக் காவல்துறையினரிடம் பீகார் காவலர்கள் ஒப்படைத்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று அவரை முன்னிலைப்படுத்தினர். முன்னதாக பாட்னா நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட மணிஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'பீகார் அரசியல்வாதிகளுக்கு தங்களது மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லை," என குற்றம்சாட்டி இருந்தார்.
ரூ.2,438 கோடி மோசடி; ஆருத்ரா இயக்குநர் கைது
சென்னை: ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் ராஜை பொருளாதாரக் குற்றப்பிரிவுத் துறையினர் நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்த நிலையில், இன்னும் ஐந்து பேர் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆருத்ரா நிறுவனம் கடந்த 2020 முதல் 2022 வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களிடம் ரூ.2,438 கோடி அளவுக்கு நிதி வசூலித்து மோசடி செய்துள்ளது.
இந்தத் தொகைக்கு கூடுதலாக வட்டி வழங்கப் படும் என உறுதியளிக்கப் பட்டதால் மக்கள் பணத்தை முதலீடு செய்ததாகவும் ஆருத்ரா நிறுவன இயக்குநர் ஹரீசுக்கும் பாஜக தலைவர்கள் அமர்பிரசாத் ரெட்டி, அண்ணாமலைக்கும் நேரடி நட்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. கட்சிக்காக இந்த மோசடி பணம் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

