சென்னை: தமிழ்நாட்டில் அதி முக கூட்டணியில்தான் பாஜக இருந்து வருகிறது என டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முதல் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்ந்து வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு அளித்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கட்சியைப் வலுப்படுத்த வேண்டுமெனில் தனித்துப் போட்டியிட வேண்டும் எனக் கூறினார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் எனவும் கூறினார்.
அண்ணாமலையின் இப்ேபச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தொடருமா என்ற கேள்வி இருந்து வந்தது.
இச்சூழலில், "தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதிமுகவுடனான கூட்டணி தொடரும்," என்று அமித்ஷா கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, "பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம்," என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பழனிசாமி கூறியபோது, "பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. இந்தக் கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும்," என்றார்.
இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் பதவி, அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் இன் றைய தேதிக்கு ஒத்திவைத்தது.
தனி நீதிபதி குமரேஷ் பாபு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் தடைவிதிக்கக் கோரியும் பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.