சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக எழுந்துள்ள புகார்களை அடுத்து, அங்கு பயிலும் மாணவிகளின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேசிய அவர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
தேசிய மகளிர் ஆணையம் தமிழகக் காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில், அந்த ஆணையமே இந்த விவகாரம் குறித்து விசாரித்து முடித்துவிட்டதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு எழுத்துபூர்வ புகார் எதுவும் வரவில்லை. எனினும் எனது கவனத்திற்கு வந்தவுடன், மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டு அறிந்தேன்.
"மேலும் விவரங்களை அறிய வருவாய் கோட்ட அலுவலர், வட்டாட்சியர், காவல் இணை ஆணையர், துணை ஆணையர், அலுவலர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. மேலும் மாணவிகள், கல்லூரி நிர்வாகத்திடம் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையில் இயங்கி வரும் கலாஷேத்ரா கல்லூரியில் பணியில் உள்ள நான்கு பேராசிரியர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன. மேலும், கல்லூரி நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவிகள் கடிதம் ஒன்றும் எழுதியுள்ளனர்.
"கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொல்லை எனும் கொடிய சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால் போராட்டம் என்று கையில் எடுத்தால், உடனடியாக விடுமுறை விட்டு, மாணவ, மாணவியரை திசை திருப்பிவிடுகிறார்கள். பாலியல் தொந்தரவு அளிக்கும் 4 பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்," என மாணவிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.