சென்னை: பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதி மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
விமான நிலையத்துக்காக பல ஏக்கர் நிலங்கள் கையப்படுத்தப்படுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி பொதுமக்கள், குறிப்பாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
250 நாள்களாக சாலை மறியல், உண்ணாவிரதம் எனப் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என அறிவித்து புதிய போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். நேற்று பரந்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்கள் கையில் கறுப்புக் கொடிகளை ஏந்தியிருந்தனர். ஏகனாபுரம் ஊர் மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"குடியிருப்புகளையும் நிலப்பகுதிகளையும் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து சிற்றூர் மக்களும் இணைந்து இரவு நேர அறவழிப் போராட்டம் நடத்தி வருகிறோம். "சுதந்திர தினம், மே தினம், உள்ளாட்சி தினம், காந்தி ஜெயந்தி ஆகியவற்றையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் விமான நிலையம் வருவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
"இந்நிலையில், நிலங்கள் கையகப்படுத்தப்படும் நடவடிக்கைகள் நீடிக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் கூறியது கண்டிக்கத்தக்கது," என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர்.