அரசு மருத்துவமனைகளில் கட்டாய முகக்கவசம்

அரசு மருத்துவமனைகளில் கட்டாய முகக்கவசம்

2 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் மெல்ல அதி­க­ரித்து வரும் நிலை­யில், அரசு மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு வரும் நோயா­ளி­கள் உள்­பட அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஏப்­ரல் முதல் தேதி­யில் இருந்து அரசு மருத்­து­வ­ம­னை­களில் உள்ள அனைத்து மருத்­து­வர்­கள், பணி­யா­ளர்­கள் என அனை­வ­ரும் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும் என்­றார்.

கொரோனா தொற்­றுப் பர­வல் குறித்து பொது­மக்­க­ளி­டம் போது­மான விழிப்­பு­ணர்வு இல்லை என்று குறிப்­பிட்ட அவர், கொரோனா வழி­காட்டு நெறி­மு­றை­களை மக்­கள் தவ­றா­மல் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்து உல­கம் முழு­வ­தும் தாண்­ட­வம் ஆடு­வ­தா­க­வும் தமி­ழ­கத்­தில் அன்­றாட தொற்­றுப் பாதிப்பு தற்­போது நூறாக அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் அமைச்­சர் கவலை தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தில் அன்றாட பாதிப்பு எண்­ணிக்கை 100-ஐ கடந்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் தமி­ழ­கத்­தில் புதி­தாக 123 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது. தற்­போது மாநி­லம் முழு­வ­தும் 689 பேர் கொரோனா தொற்­றுக்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். உயி­ரி­ழப்பு ஏது­மில்லை. இத்­த­க­வல்­களை சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டது.

"உல­கம் முழு­வ­தும் உரு­மாற்ற 'ஓமிக்­ரான்' பாதிப்பு மீண்­டும் அதி­க­ரிக்­கத் தொடங்கி உள்­ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற அனைத்துலக விமான நிலை­யங்­களில் கடந்த மாதம் வரை வெளி­நா­டு­களில் இருந்து வரும் பய­ணி­களில் சுமார் இரண்டு விழுக்­காட்­டி­னருக்கு கொரோனா பரி­சோதனை செய்த­போது, சரா­ச­ரி­யாக இரண்டு, மூன்று நாள்­க­ளுக்கு ஒரு­முறை ஒரு­வ­ருக்கு நோய்த் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது.

"ஆனால் இப்­போதோ நாள்­தோ­றும் எட்டு முதல் பத்து பேருக்கு தொற்று கண்­ட­றி­யப்­ப­டு­கிறது," என்­றார் அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன்.

இதற்கிடையே, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றி வந்தால் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்காது என்றும் யாரும் அது குறித்து அச்சப்பபடத் தேவையில்லை என்றும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.