சென்னை: கோட்டை ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது குறித்து சென்னையில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
இந்தித் திணிப்பு கூடாது என பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தின் ஆவின் நிறுவனமும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனமும் உற்பத்தி செய்யும் தயிர் பொட்டலங்களில் 'தஹி' என்ற இந்தி வார்த்தையை அச்சிட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'தஹி' என்றால் தமிழில் தயிர் என்று அர்த்தம். அந்தந்த மாநில மொழி வார்த்தைகளையும் அடைப்புக் குறிக்குள் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மாநில அரசுகளுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தது.
இதற்கு தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மொழி ஆர்வலர்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பின் காரணமாக இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
இதனிடையே, புதிய விவகாரம் கிளம்பியுள்ளது. சென்னை கோட்டை புறநகர் ரயில் நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், அந்தப் பலகையில் உள்ள இந்தி வார்த்தை மட்டும் அடையாளம் தெரியாத சிலரால் கறுப்பு மை பூசி மறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது. ரயில் நிலைய கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை வைத்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.