தூத்துக்குடி: கடந்த இரு நாள்களாக நடைபெற்ற ஆய்வின்போது தூத்துக்குடியில் உள்ள சங்கர ராமேசுவரர் கோவிலில் பழமை வாய்ந்த 13 ஓலைச்சுவடி கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 195 கோவில்களில் இதுவரை கள ஆய்வு செய்து, 176,149 சுருணை ஏடுகளையும் 335 இலக்கியச் சுவடிகளையும் 26 செப்புப் பட்டயங்களையும் கண்டுபிடித்துள்ளதாக ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கத் திட்டப் பணிக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சுவடியியல் அறிஞருமான சு.தாமரைப்பாண்டியன் தெரிவித்தார்.
"தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள 13 ஓலைச்சுவடி கட்டுகளில், ஏழு திருமுறைகளும் காரைக்கால் அம்மையார் இயற்றிய திருப்பதிகங்களும் காணப்படுகின்றன. மேலும், இந்த ஓலைச்சுவடிகளைப் பிரதி எடுத்தவர் நம்பிக்குறிச்சி எனும் ஊரைச் சேர்ந்த மாசிலாமணி என்ற குறிப்பும் உள்ளது.
"சேக்கிழார் இயற்றிய 'பெரியபுராணம்' எனும் நூல் அடங்கிய ஒரு சுவடிப் பிரதியும் இருந்தது. இந்தச் சுவடியைப் பிரதி எடுத்தவர் கொட்டாரக்குறிச்சியைச் சேர்ந்த ஆ.வைகுண்டம் பிள்ளை என்ற குறிப்பு சுவடியில் காணப்பட்டது," என்று சு.தாமரைப்பாண்டியன் கூறினார்.
மாணிக்கவாசகர் இயற்றிய எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படும் திருவாசகம், திருக்கோவை நானூறு, அகத்தியர் தேவாரத் திரட்டு, திருவாசகம், திருவிசைப்பா உள்ளிட்ட மேலும் பல்வேறு நூல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
13 சுவடிக்கட்டுகளில் உள்ள 3,127 ஏடுகளைப் பராமரித்து பாதுகாக்கும் பணியோடு, அவற்றை அட்டவணைப்படுத்தும் பணியும் தற்போது நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கீழக்கரை அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன.

