செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read

கொரோனா ஊரடங்கு இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: கொரோனா தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் கோவையில் ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன என்றும் மருத்துவ, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவ மனையில் உயிர்வாயு போதுமான அளவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சாதிப் பெயரைச் சொல்லி திட்டினார்: மாணவி புகாரால் பேராசிரியர் கைது

ஈரோடு: சாதிப் பெயரைச் சொல்லி தம்மை ஏசியதாக மாணவி அளித்த புகாரின் பேரில் காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர் கைதாகி உள்ளார். 49 வயதான சண்முகராஜா என்ற அந்தப் பேராசிரியர், கல்லூரியில் படித்து வரும் மாணவிகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. கல்லூரி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் மாணவிகள், வேறு வழியின்றி காவல்துறையை அணுகியதாகத் தெரிவித்துள்ளனர். அண்மையில் பட்ட மேற்படிப்பு மேற்கொண்டுள்ள மாணவி ஒருவரை சண்முகராஜா உருவக்கேலி செய்ததாகவும் அதை அம்மாணவி தட்டிக் கேட்டபோது சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் சண்முகராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு வெவ்வேறு பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டடார்.

திருச்சி விமான நிலையத்தில் பயணியின் பையில் துப்பாக்கி தோட்டா

திருச்சி: ஹைதராபாத்துக்குச் செல்லவிருந்த இளையரின் பையில் துப்பாக்கித் தோட்டா இருப்பது தெரியவந்ததை அடுத்து திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சந்தோஷ் ராஜம் என்ற இளையர் நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து விமானம் மூலம் ஹைதராபாத் செல்ல இருந்தார். விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கையின் பொருட்டு அவரது உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டனர். அப்போது சந்தோஷ் கொண்டு வந்த பையில், வெடிக்காத 5.56 மில்லி மீட்டர் அளவுள்ள துப்பாக்கித் தோட்டா ஒன்று காணப்பட்டது. இதனையடுத்து விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார். துப்பாக்கி தோட்டா எவ்வாறு தனது பைக்குள் வந்தது என்பது தெரியவில்லை என்று சந்தோஷ் கூறிய நிலையில், உரிய தகவல்களைப் பெற்றுக்கொண்டு, காவல்துறையினர் அவரைப் பிணையில் விடுவித்தனர்.

சாலையோர கால்வாயில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இருவர் பலி

சென்னை: சாலையோர வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் உட்பட இருவர் பலியாகி விட்டனர். நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் தஞ்சை மாவட்டம், ஓரத்தநாடு பகுதியில் நிகழ்ந்தது. நாகை மாவட்டம், வேளாங்கண்ணி யில் உள்ள தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் 48 பேர் பேருந்தில் சென்றனர். அவர்கள் பயணம் செய்த பேருந்து ஒரத்தநாடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்தது. பின்னர் தாறுமாறாக ஓடி சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கியவர்கள் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியதை அடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் திருச்சூரை சேர்ந்த 9 வயதுச் சிறுவனும் அவனது தாயாரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.