குற்றச்சாட்டுக்கு ஆளான நான்கு பேரையும் பணி நீக்கம் செய்தது நிர்வாகம்
சென்னை: பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் ஹரி பத்மனை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மாநில மகளிர் ஆணையத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்தார்.
பாலியல் தொல்லை புகார் தொடர்பாக ஹரி பத்மனிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டிருந்த நிலையில், ஹைதராபாத் சென்றிருந்த அவர் திடீரென தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்பட்டது. அவரைத் தேடிக் கண்டுபிடிக்க தனிப்படையினர் ஹைதராபாத் சென்றிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை வந்த பேராசிரியர் ஹரி பத்மனை காவல்துறை நேற்று காலை கைது செய்தது.
அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள், ஹரி பத்மனின் கைப்பேசியை இணையக்குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வகத்துக்கு அனுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பேசி மூலம் அவர் எத்தனை மாணவிகளைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார், எந்த வகையான பாலியல் தொல்லைகளைக் கொடுத்தார் என்பது விரைவில் தெரியவரும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இதனிடையே கலாஷேத்ரா கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் முன்னிலையானார். அப்போது ஆணையத்தின் மாநிலத் தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். விசாரணை முழுமையடைந்த பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என மகளிர் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"கலாஷேத்ரா கல்லூரியில் புகார் பிரிவு உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பிரிவு இத்தனை ஆண்டுகளாக முறையாக இயங்கியதா எனத் தெரியவில்லை.
"அதற்குரிய ஆவணங்கள் எதையும் கல்லூரி நிர்வாகம் வழங்கவில்லை," என மகளிர் ஆணையம் தெரிவித்தது.
இதனிடையே பாலியல் தொல்லை கொடுத்த புகாரை எதிர்கொண்டுள்ள பேராசிரியர் ஹரி பத்மன் உள்ளிட்ட நான்கு பேரையும் கலாஷேத்ரா கல்லூரி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

