காரைக்குடி: மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த ராகுல் காந்தியின் வழக்கை அவசர அவசரமாக முப்பதே நாள்களில் விசாரித்துத் தீர்ப்பு வழங்கக் காரணம் என்ன என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் ஆகியோரை காரைக்குடியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்தித்தனர். அந்தச் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ப.சிதம்பரம், "ராகுல்காந்தியை தகுதிநீக்கம் செய்ததன்மூலம் இந்தியாவில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஒன்றிணையும் வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. ராகுல் காந்தி மீது போடப்பட்டிருந்த வழக்கு 2019 ஆண்டில் இருந்து கிடப்பில் போடப்பட்டிருந்தது. அந்த வழக்கை தற்போது கையில் எடுத்து அவசர அவசரமாக விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கவேண்டாம் என வாதியே மனுத்தாக்கல் செய்தும் குஜராத் நீதிமன்றம் விசாரித்துள்ளது. ராகுல் காந்தி கர்நாடகா மாநிலத்தின் கோலாரில் பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
கோலாருக்கும் சூரத்துக்கும் என்ன தொடர்பு என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுவரை எந்த ஒரு குற்றவியல் அவதூறு வழக்கும் 30 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்கப்பட்டதில்லை. சூரத் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோது நீதிபதி மாற்றப்பட்டார். 23ஆம் தேதி தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட பின் 24ஆம் தேதி அவசர அவசரமாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அந்த உத்தரவில் கையெழுத்திட்டது யார் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்குத் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துக் கையெழுத்திடவில்லை. தண்டனைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 163 ஆண்டுகளில் வாய்மொழி அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டு தண்டனை வழங்கியதே இல்லை," என்றார். மேலும் அவர் கூறுகையில், ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து பாஜகவை அகற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்றார்.

