தரமற்ற மருந்தால் மூவர் இறந்துவிட்டனர்; 8 பேருக்கு பார்வை பறிபோனதாகத் தகவல்
சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கண் மருந்தைப் பயன்படுத்திய அமெரிக்கர்கள் பலருக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து அந்த மருந்தைப் பயன்படுத்தக் கூடாது என அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அங்கு விற்பனையாகாமல் உள்ள கண் மருந்தை மொத்தமாக திரும்பப் பெற்றுக் கொள்வதாக அதன் உற்பத்தியாளரான 'குளோபல் ஃபார்மா' நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிலையம் சென்னையில் இருந்து ஏறத்தாழ நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு தயாரிக்கப்படும் கண் மருந்துதான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன.
இந்நிலையில், அந்தக் கண் மருந்தைப் பயன்படுத்தியதால் மூன்று அமெரிக்கர்கள் பலியாகிவிட்டதாகவும் எட்டு பேருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது என்றும் அமெரிக்கத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோருக்கு பல்வேறு விதமான கண் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கண் மருந்து சுத்தமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரைத் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
"அந்தக் கண் மருந்தின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதன் மூலம் அந்த மருந்தில் எந்தவிதமான தொற்று ஏற்படுத்தக்கூடிய கிருமியோ அல்லது கண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மாசுகளோ இல்லை.
"மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்களும் உரிய தர நிலைகளுக்கு ஏற்பவே உள்ளன," என்று தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் விஜயலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் என்ற அமைப்புதான் சென்னை நிறுவனத்தின் கண் மருந்து குறித்த குற்றச்சாட்டை எழுப்பி உள்ளது.
கண்களில் செயற்கையாகக் கண்ணீரை வரவழைப்பதன் மூலம் விழித்திரை காய்ந்து போகாமல் இருக்க இந்த கண் மருந்து உதவுகிறது. எனினும் அசுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தின் மூலம் அமெரிக்காவில் இதுவரை கண்டறியப்படாத கிருமித்தொற்று பலருக்கு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மொத்தம் 55 வகையான கண் கோளாறுகளால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் 12 மாகாணங்களில் இத்தகைய பாதிப்பு உள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைக்காலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பாக சில நாடுகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

